அவைத் தலைவர் அவர்களே, நீதி வழங்கும் நீதிபதி அவர்களே, ஆசிரியப் பெருமக்களே, மாணவ மணிகளே, நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி வணக்கம் கூறுகிறேன்.
பூலான் பாஹாசாவை முன்னிட்டு நடத்தப்படும் இந்தப் பேச்சுப் போட்டியில் நான் எடுத்துக் கொண்ட தலைப்பு, ஒரே மலேசியா கொள்கை என்பதாகும். இந்தக் கொள்கையை நமது நாட்டின் ஆறாவது பிரதமராகிய டத்தோஸ்ரீ நாஜிப் துன் ரசாக் கடந்தாண்டில் அறிமுகப்படுத்தினார்.
ஒரே மலேசியா என்பது என்ன?
இந்தப் பொன்னான மலை நாட்டில் பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். பல மாநிலங்கள் இணைந்துள்ளன. பல அரசியல் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பல தட்டில் மக்கள் பிரிந்துள்ளனர். இப்படிப் பலப் பல கூறுகளாகப் பிரிந்துள்ள மக்கள் அனைவரும் வேற்றுமைகளை மறந்து, தாங்கள் அனைவரும் ஒரே நாட்டின் மைந்தர்கள் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டும் என்பதே ஒரே மலேசியா கொள்கை.
பள்ளிகள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் என்று பல இடங்களில் நம் மக்கள் சந்திக்கின்றனர். அப்போது தங்கள் வேறுபாடுகளின் நிமித்தம் அவர்கள் உறவாடாமல் இருக்க முடியாது. தங்கள் எதிரே வருகிறவர்களை ஆர்வத்துடனும் இன்முகத்துடனும் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும். அதைத் தான் நம் நாட்டுத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
இவ்விடத்தில் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்....
இவ்வளவு காலம் நாம் இந்த அந்நியோன்நியத்தைப் பேணவில்லை? ஆம், பேணியிருக்கிறோம்.
அப்படியென்றால், ஏன் புதிதாக இப்படியொரு கோட்பாட்டை அறிவிக்க வேண்டும்?
இது நியாயமான கேள்விதான்.
இந்தப் பரபரப்பான உலகில் காலாகாலமாக நாம் கடைபிடித்து வந்த பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் தேய்ந்து போக வாய்ப்புண்டு. மேலும், காலஞ் செல்லச் செல்ல புதிய தலைமுறைகள் நாட்டில் உருவாகிறார்கள். இந்நிலையில், தங்கள் முன்னோர்களின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதனால்தான். ஆட்சிக்கு வந்த வேகத்தில் நமது புதிய பிரதமர் ஒரே மலேசியா கொள்கையைப் பிரகடனப் படுத்தினார்.
சமீபத்தில் தேவாலயங்கள் தாக்கப்படும் சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இது உண்மையில் நமது ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டாக்வி விட்டது. மீண்டும் ஒரு முறை நாட்டின் மக்கள் தங்கள் மனதில் ஏற்பட்ட காயங்களை மறந்து, பகைமைகளைப் போக்கி, ஒருவருக்கொருவர் கைக்குலுக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று தமிழில் ஒரு மூதுரை உண்டு. இந்த பூவுலகம் நமக்குச் சொந்தம். பாரில் வாழும் மக்கள் அனைவரும் நமது உறவினர் என்பது இந்த மூதுரையின் பொருள். இதே பொருளைத்தான் நமது பிரதமரும் மறு உருவாக்கம் செய்து நமது நாட்டின் தேவைக்கு ஏற்பப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.
காலத்தின் கட்டாயத்தால், இத்துடன் என் உரையை முடித்து விடைபெறுகிறேன்.
ஒரே மலேசியா என்று உறக்கச் சொல்வோம்
உலக மக்களுக்கு நம் ஒற்றுமையை உணரச் செய்வோம்.
ஒரே மலேசியா என்போம்
நாட்டை ஓங்கச் செய்வோம்
நன்றி.
No comments:
Post a Comment