Sunday, November 25, 2012

தமிழாசிரியர்கள் மேற்கல்வியைத் தொடர்வதற்குத் தடையா?


http://www.facebook.com/groups/mitc.albil/  என்ற ஃபேஸ்புக் குழுவில் ஓர் ஆசிரியரின் பதிவிக்கு விளக்கம் தரும் பதிவாக இது அமைகிறது.

இது போன்ற பிரச்சனைகளின் தெளிவான விளக்கங்கள் இருந்தால்தான் கருத்துரைக்க முடியும்.
1.    தலைமையாசிரியர் யார்?
2.    அவருடைய பண்பு நலன் என்ன?
3.    விண்ணப்பிக்கும் ஆசிரியர் பள்ளியில் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உள்ளவர்?
4.    விண்ணப்பிக்கும் ஆசிரியர் காலை நேரத்தில் பயிற்றுவிக்கத் தகுதியானவரா?
5.    விண்ணப்பிக்கும் ஆசிரியர் தலைமையாசிரியரிடம் பணிவான முறையில் அணுகினாரா?
6.    தலைமையாசிரியருக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியருக்கும் பரஸ்பர உறவு இருக்கிறதா?

தலைமையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பர். சில தலைமையாசிரியர்கள் தன் சுய ஆதாயத்தை மட்டும் கருதுவர். சில தலைமையாசிரியர்கள் மாணவர் ஆசிரியர் நலனில் அதிக அக்கறை காட்டுவர். தலைமையாசிரியர் சுயநலம் கொண்டவர் என்றால் விண்ணப்பிக்கும் ஆசிரியர் விவகாரம் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் ஆசிரியர்களின் கல்வி / வாழ்க்கை முன்னேற்றத்தில் தடையாக இருப்பார்.

பல தலைமையாசிரயர்களின் தங்கள் ஆசிரியர்களின் கல்வி / வாழ்க்கை முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடையவர்களாக இருப்பர். இப்படிப்பட்ட தலைமையாசிரியர்கள், தங்கள் நிர்வாகத்திற்கு இடையூறாக இருந்தாலும், சில புத்திமதிகள் கூறி, அந்த ஆசிரியருக்கு அணுகூலமான அனுமதியை வழங்கி விடுவர். அதாவது, இந்தப் பிரச்சனையில், அந்த ஆசிரியரை காலையில் பணிக்கு அமர்த்துவர்.

தலைமையாசிரியருடைய பண்பு நலனிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சில தலைமையாசிரியர்கள், தங்கள் ஆசிரியர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில் பொறாமைப் படுவர். எனவே, ஆசிரியர்களின் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளுக்குத் தங்களால் ஆன தடைகளை விதிப்பர். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு நல்லதைச் செய்தால் கூட பாராட்ட மாட்டார்கள். மாறாக, தவறு செய்து விட்டால் திட்டித் தீர்ப்பார்கள். தங்களை எதிர்த்து ஆசிரியர்கள் எதுவும் செய்ய முடியாது என்றும், தங்களிடத்தில் அரசியல், குண்டர் கும்பல் செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும் இன்னும் வேறு விதமாகவும் ஆசிரியர்களை மிரட்டிக் கொண்டிருப்பார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சில ஆசிரியர்கள் சம்பளம் வாங்குவதற்காக மாத்திரமே வேலை செய்வார்கள். மேலோட்டமாக பார்ப்பதற்கு அவர்களுடைய பணி மன நிறைவானதாகக் காணப்படும். ஆனாலும், தொழிலின் இறுதி இலக்கான, ‘மாணவர்களின் கல்வி முன்னேற்றம்’ 0ஆகத் தான் இருக்கும். அதாவது, ஆசிரியர்கள் ரெக்கோர்ட் புத்தகத்தை நிறைவாக எழுதியிருப்பார்கள்; வகுப்புக்குச் சென்று பாடம் நடத்தியருப்பார்கள்; மாணவர்களின் நோட்டு புத்தகங்களைத் திருத்தியிருப்பார்கள்; மாதாந்திரச் சோதனைகள் நடத்தியிருப்பார்கள், புள்ளிகளை ரெக்கோட் புத்தகத்தில் எழுதியிருப்பார்கள்எல்லாமே இருக்கும். ஆனால், வகுப்பில் 3-4 மாணவர்களைத் தவிர வேறு யாரும் அந்த ஆசிரியரால் பயனடைந்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆசிரியகளிடம் அவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டினால், ஏருக்கு மாறாகப் பேசுவர். மாணவர்களையும் பெற்றோர்களையும் குறை சொல்வர். இப்படிப் பட்ட ஆசிரியர்களிடம் தலைமையாசிரியர்கள் இயல்பாகவேபலி வாங்கும்எண்ணம் கொண்டிருப்பர். என்னைப் பொறுத்த வரை, அந்தத் தலைமையாசிரியர் செய்யும் காரியம் நியாயமாகவே தெரிகிறது. அதாவது, தொழிலின் கடைசி இலக்கை அடைய முடியாத ஆசிரியர்கள், தங்கள் கல்வி நலனின் முன்னேற்றமடைய தகுதியற்றவர்கள், என்பது அந்தத் தலைமையாசிரியரின் கருத்து.

நன்றாக உழைக்கின்ற, ஆரோக்கியமான, உண்மையான ஆசிரியர்களைக் காலையிலும், வெளியில் அதிக ஈடுபாடு உடைய, உடல் ஆரோக்கியமற்ற, ஏமாற்றுகிற ஆசிரியர்களை மாலையிலும் பணிக்கு அமர்த்துவது பள்ளி நிர்வாகத்தின் பொதுவான நியதி. விண்ணப்பிக்க ஆசிரியர்கள் இதில் எந்த ரகம் என்பதை ஆராய வேண்டும். உதாரணமாக, உடல் ஆரோக்கியம் காரணமாக நான் மாலையில் பணிக்கு அமர்த்தப் பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்படுகின்ற பாடங்களும் அரசாங்க சோதனைக்கு உட்படாத பாடங்கள் ஆகும். நான் எந்த வகையில் காலையில் பணிக்கு அமர்த்த விண்ணப்பிப்பது நியாயமன்று. இப்படி விண்ணப்பிக்கின்ற ஆசிரியரும் தங்களைச் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் பரஸ்பரமும் புரிந்துணர்வும் இருக்க வேண்டியது அவசியம். அப்படி பரஸ்பர உணர்வு இருந்தால்தான், நம்முடைய ஏதாவது ஒரு தேவைக்கு அவர் அனுமதி வழங்குவார். பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தலைமையாசிரியர்களை மதிப்பதில்லை. அல்லது அவருடைய கட்டளைகளுக்கு உடன்படுவதில்லை. உதாரணமாக யுபிஎஸ்ஆர் தேர்ச்சியின் விகிதத்தை உயர்த்துவதற்கு தலைமையாசிரியர் பின்னேற/சனி/ஞாயிறு வகுப்புகளை நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும், மாணவர் கல்வி நலனைப் பொறுத்தவரை இது நியாயமான காரியமாகும். இந்தப் பிரச்சனையை மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் ஆசிரியர் சங்கத்திற்கும் கொண்டு செல்லும் பட்சத்தில், தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது நிச்சயமாகும். ஆனால், இந்தப் பிரச்சனையில் தன்னைச் சிக்க வைத்தவர் மீது அவர் கால்ப்புணர்ச்சி கொண்டிருப்பார். அந்த வகையில், தன்னைக் ‘காட்டிக் கொடுத்த’ முதுகலைக் கல்வியை மேற்கொள்வதற்கு அவர் இடையூறு செய்வார்.

நீங்கள் உயர்க் கல்வியைத் தொடர்வதால் பள்ளிக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும்  பயன் ஏதாவது இருக்கிறதா? இன்று பல தலைமையாசிரியர்கள் சமூகவாதிகளாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்களோடு சுயநலப் போக்குடைய ஆசிரியர்கள் வேலை செய்வது கஷ்டம். உதாரணமாக ஒரு தலைமையாசிரியர் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பள்ளியில் தங்கி வேலை செய்கிறார்; சனி, ஞாயிறுகளில் கூட அவர் பள்ளிக்கு வருகிறார். மாணவர்களைத் தன் சொந்தப் பிள்ளைகள் போல் கவனிக்கிறார். பள்ளியில் நடைபெறும் வாங்கல் – விற்றல் நடவடிக்கைகளில் மூலம் கிடைக்கும் கமிஷன் பணத்தை பள்ளி மேம்பாட்டுக்காக செலவழிக்கிறார்; பள்ளி கணக்கு வழக்கில் ஏதோ தவறு எற்பட்டதில் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, அதனைச் சரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்களோ மாத வறுமானத்திற்காக மாத்திரமே வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். (வேலை செய்கிறீர்கள் என்ற வார்த்தையைக் கவனத்தில் கொள்ளவும்). நீங்கள் படித்துக் கொடுக்கிறீர்கள்; ஆனால், வகுப்பில் உள்ள பேரளவிலான மாணவர்கள் உங்கள் போதனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக, பள்ளியின் தேர்ச்சி நிலை சரிகிறது. தலைமையாசிரியர் உங்களை விசாரிக்கும் போது, அவர் மனதைச் சங்கடப்படுத்தும வகையில் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தலைமையாசிரியரைப் பொறுத்த வரை, நீங்கள் மேற்கொள்கிற உயர்க்கல்வியால் பள்ளியும், சமுதாயமும், நாடும் எந்தப் பயனும் அடையாது, என்ற எண்ணமே தோன்றும். அதாவது, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே நீங்கள் பயில்கிறீர்கள். பள்ளியைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நீங்கள் எந்த அக்கறையையும் காட்டவில்லை. எனவே, அந்தத் தலைமையாசிரியரைப் பொறுத்த வரை உங்களைக் காலையில் பணிக்கு அமர்த்தி சலுகை காட்ட வேண்டிய அவசியமில்லை.


உயர்க் கல்வியை மேற்கொள்ளும் தமிழாசிரியர்களுக்குச் சில ஆலோசனைகள்:

எப்போதும் தலைமையாசிரியரிடம் நல்லுறவைப் பேணுங்கள். தலைமையாசிரியர் எதிரே நடந்து சென்றால் வணக்கம் செலுத்துங்கள். அவர் இடுகின்ற கட்டளைகளை முடிந்தவரை நிறைவேற்றப் பாருங்கள். அவர் எதிர்ப்பார்ப்பதை விட அதிகம் செய்வது இன்னும் நல்லது. அப்படியே நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டால், அவர் பரிவையும் இரக்கத்தையும் பெறும் வகையில் பணிந்து பேசுங்கள்.

பள்ளிக்கான உங்கள் சமூகக் கடப்பாட்டை வெளிப்படுத்துங்கள். இதனைப் பல வகையில் செய்யலாம். உதாரணமாக உங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆர்.எம்.டி வழங்கப்படுகிறது என்றால், உங்கள் நன்கொடையைக் கொடுத்து, மேலும் அதிகமான மாணவர்களுக்கும், அரசாங்கம் நிதியை நிறுத்தும் காலத்திலும் மாணவர்கள் உணவு பெறும் வகையிலும் நிதி வழங்குங்கள். ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவை ஈடுசெய்ய பெ.ஆ.சங்கத்திற்கு உதவுங்கள். பள்ளிக்கு வராமல் மட்டம் போடும் மாணவர்களை வீட்டில் சென்று விசாரித்து அவர்களுடைய பிரச்சனையைக் களையப் பாருங்கள். நிலைமை அணுகூலமாக இருந்தால் வரிய நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளைகளை உங்கள் வீட்டில் தங்க வைத்து பள்ளியில் பயில வையுங்கள்.

சில நேரம் பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் சண்டை போட வருவார்கள். அந்த நேரத்தில் அந்த பெற்றோரைச் சமாதானப் படுத்தி அனுப்புங்கள். நீங்கள் அந்தப் பிரச்சனையில் சம்பந்தப்படவில்லை என்றாலும், மன்னிப்பு கேளுங்கள். தலைமையாசிரியர் பக்கம் தவறு இருந்தால் அதனைப் பக்குவமாக தனிமையில் எடுத்துச் சொல்லுங்கள். பள்ளியில் ஒரு சுபிட்சமான நிலைமைய ஏற்படுத்த உங்கள் யுத்திகளைப் பயன்படுத்துங்கள்.

தலைமையாசிரியருக்கு விரோதமாக வெளியில் பேசாதீர்கள். அவருக்கு விரோதமாக கீழறுப்பு வேலையில் இறங்காதீர்கள். இது, ஒரு பந்தை சுவற்றில் எறிவதற்குச் சம்ம். அந்தப் பந்து உங்கள் முகத்தையே பதம் பார்க்கும். மற்ற ஆசிரியர்கள் குறை பேசினாலும், உங்களுக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் கூட, தலைமையாசிரியர் பக்கம் பேசுங்கள். ஆனால், அதே நேரத்தில், தலைமையாசிரியரிடம் பக்குவமாக அவர் குறையைச் சுட்டிக் காட்டுங்கள். அதற்கென்று ‘போட்டு கொடுக்காதீர்கள்’. நீங்கள் ஒரு சிறந்த சமூகவாதியா இல்லையா என்பது, இது போன்ற பிரச்சனைகளை அணுவதில் வெளிப்படும். ஓர் ஆசிரியர் தலைமையாசிரியரைப் பற்றி குறைபேசும் போது, நீங்களும் சேர்ந்து பேசுவதும் ஆபத்து; அந்த ஆசிரியரைப் பற்றி ‘போட்டுக் கொடுப்பதும்’ ஆபத்து.

நீங்கள் மேற்கொள்ளப் போகிற உயர்க் கல்வி அந்தப் பள்ளிக்கே பயனைக் கொண்டு வரும் என்று நிரூபியுங்கள். இந்த நம்பிக்கையை உண்டாக்குவது எப்படி? இன்று பல ஆசிரியர்கள் கல்லூரியில் கற்கின்ற விஷயங்களை, கல்லூரியை விட்டு வெளியேறும் போது, அங்கேயே மூட்டை கட்டி வைத்து வந்து விடுவார்கள். உண்மையில் கல்லூரியில் பயில்கின்ற விஷயங்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்கு பல வகையில் ஒத்தாசையாக இருக்கும். ஆனால், சில ஆசிரியர்கள் யுபிஎஸ்ஆர் வகுப்பை எடுத்து நடத்த அஞ்சுவார்கள். இதனால் தங்களுக்கு வேலைப் பளு அதிகரித்து விடும் என்று கவலைப்படுவார்கள். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி கை கழுவப் பார்ப்பார்கள். இப்படிச் செய்தீர்கள் என்றால், உண்மையில் உங்கள் முதுகலைக் கல்வி எந்த வகையிலும் எந்தப் பள்ளிக்கும் பயனளிக்கப் போவதில்லை. நீங்கள் முன்பு கல்லூரியில் பயின்ற விஷயங்கள் எல்லாம் இப்போது பணி புரிகிற பள்ளியில் பயனுடையதாக இருக்கிறது என்றால், உங்கள் உய்ரக் கல்விக்கு அணுகூலமாக உங்களைக் காலை நேரப் பணிக்கு அமர்த்துவர், தலைமையாசிரியர்.

இன்னும் பிரச்சனையா?

உங்களுக்கு இரண்டு தேர்வு இருக்கிறது:
1.    ஒரு நேரப் பள்ளிக்கு மாறிச் செல்லுங்கள். இயல்பாகவே உங்களை மாலை நேரப் பணிக்குத் தலைமையாசிரியர் அமர்த்த முடியாது.
2.    சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் (CBTG).

கடைசியாக ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
            மேற்கண்ட என் பதிவை வாசித்த பிறகு, இந்தத் தலைமையாசிரியர் உண்மையிலேயே உங்களிடம் நியாயமில்லாமல் நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். rawangjohnson@yahoo.com என்ற எனது மின்னஞ்சலுக்கு எழுதி எல்லா விபரங்களையும் தெரிவியுங்கள். ஒரு சில தலைமையாசிரியர்கள் சமுதாயத்தைக் கெடுக்கும் வைரஸ்களாக இருக்கிறார்கள். அவர்களைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். வேறு சிலர் இன்னும் என் பார்வையில் சிக்காமல் இருக்கிறார்கள். ‘இந்தியன் தாத்தா’, ‘அந்நியன்’ போல் இப்படிப்பட்டவர்களை அழித்துக் கட்டுவதற்குத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய எந்த விபரமும் எந்த வகையிலும் வெளிப்படாது. யாரும் அறியாத நேரத்தில், அவர்களுக்கு விரோதமான ‘தாக்குதல்’ மேற்கொள்ளப்படும். எனது நீண்ட பதிவை வாசித்த பிறகு உங்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment