Sunday, November 25, 2012

தமிழாசிரியர்கள் மேற்கல்வியைத் தொடர்வதற்குத் தடையா?


http://www.facebook.com/groups/mitc.albil/  என்ற ஃபேஸ்புக் குழுவில் ஓர் ஆசிரியரின் பதிவிக்கு விளக்கம் தரும் பதிவாக இது அமைகிறது.

இது போன்ற பிரச்சனைகளின் தெளிவான விளக்கங்கள் இருந்தால்தான் கருத்துரைக்க முடியும்.
1.    தலைமையாசிரியர் யார்?
2.    அவருடைய பண்பு நலன் என்ன?
3.    விண்ணப்பிக்கும் ஆசிரியர் பள்ளியில் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு உள்ளவர்?
4.    விண்ணப்பிக்கும் ஆசிரியர் காலை நேரத்தில் பயிற்றுவிக்கத் தகுதியானவரா?
5.    விண்ணப்பிக்கும் ஆசிரியர் தலைமையாசிரியரிடம் பணிவான முறையில் அணுகினாரா?
6.    தலைமையாசிரியருக்கும் விண்ணப்பிக்கும் ஆசிரியருக்கும் பரஸ்பர உறவு இருக்கிறதா?

தலைமையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருப்பர். சில தலைமையாசிரியர்கள் தன் சுய ஆதாயத்தை மட்டும் கருதுவர். சில தலைமையாசிரியர்கள் மாணவர் ஆசிரியர் நலனில் அதிக அக்கறை காட்டுவர். தலைமையாசிரியர் சுயநலம் கொண்டவர் என்றால் விண்ணப்பிக்கும் ஆசிரியர் விவகாரம் மட்டுமல்லாமல் மற்ற எல்லா விஷயங்களிலும் ஆசிரியர்களின் கல்வி / வாழ்க்கை முன்னேற்றத்தில் தடையாக இருப்பார்.

பல தலைமையாசிரயர்களின் தங்கள் ஆசிரியர்களின் கல்வி / வாழ்க்கை முன்னேற்றத்தில் அதிக அக்கறையுடையவர்களாக இருப்பர். இப்படிப்பட்ட தலைமையாசிரியர்கள், தங்கள் நிர்வாகத்திற்கு இடையூறாக இருந்தாலும், சில புத்திமதிகள் கூறி, அந்த ஆசிரியருக்கு அணுகூலமான அனுமதியை வழங்கி விடுவர். அதாவது, இந்தப் பிரச்சனையில், அந்த ஆசிரியரை காலையில் பணிக்கு அமர்த்துவர்.

தலைமையாசிரியருடைய பண்பு நலனிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சில தலைமையாசிரியர்கள், தங்கள் ஆசிரியர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதில் பொறாமைப் படுவர். எனவே, ஆசிரியர்களின் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளுக்குத் தங்களால் ஆன தடைகளை விதிப்பர். இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு நல்லதைச் செய்தால் கூட பாராட்ட மாட்டார்கள். மாறாக, தவறு செய்து விட்டால் திட்டித் தீர்ப்பார்கள். தங்களை எதிர்த்து ஆசிரியர்கள் எதுவும் செய்ய முடியாது என்றும், தங்களிடத்தில் அரசியல், குண்டர் கும்பல் செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும் இன்னும் வேறு விதமாகவும் ஆசிரியர்களை மிரட்டிக் கொண்டிருப்பார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. சில ஆசிரியர்கள் சம்பளம் வாங்குவதற்காக மாத்திரமே வேலை செய்வார்கள். மேலோட்டமாக பார்ப்பதற்கு அவர்களுடைய பணி மன நிறைவானதாகக் காணப்படும். ஆனாலும், தொழிலின் இறுதி இலக்கான, ‘மாணவர்களின் கல்வி முன்னேற்றம்’ 0ஆகத் தான் இருக்கும். அதாவது, ஆசிரியர்கள் ரெக்கோர்ட் புத்தகத்தை நிறைவாக எழுதியிருப்பார்கள்; வகுப்புக்குச் சென்று பாடம் நடத்தியருப்பார்கள்; மாணவர்களின் நோட்டு புத்தகங்களைத் திருத்தியிருப்பார்கள்; மாதாந்திரச் சோதனைகள் நடத்தியிருப்பார்கள், புள்ளிகளை ரெக்கோட் புத்தகத்தில் எழுதியிருப்பார்கள்எல்லாமே இருக்கும். ஆனால், வகுப்பில் 3-4 மாணவர்களைத் தவிர வேறு யாரும் அந்த ஆசிரியரால் பயனடைந்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆசிரியகளிடம் அவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டினால், ஏருக்கு மாறாகப் பேசுவர். மாணவர்களையும் பெற்றோர்களையும் குறை சொல்வர். இப்படிப் பட்ட ஆசிரியர்களிடம் தலைமையாசிரியர்கள் இயல்பாகவேபலி வாங்கும்எண்ணம் கொண்டிருப்பர். என்னைப் பொறுத்த வரை, அந்தத் தலைமையாசிரியர் செய்யும் காரியம் நியாயமாகவே தெரிகிறது. அதாவது, தொழிலின் கடைசி இலக்கை அடைய முடியாத ஆசிரியர்கள், தங்கள் கல்வி நலனின் முன்னேற்றமடைய தகுதியற்றவர்கள், என்பது அந்தத் தலைமையாசிரியரின் கருத்து.

நன்றாக உழைக்கின்ற, ஆரோக்கியமான, உண்மையான ஆசிரியர்களைக் காலையிலும், வெளியில் அதிக ஈடுபாடு உடைய, உடல் ஆரோக்கியமற்ற, ஏமாற்றுகிற ஆசிரியர்களை மாலையிலும் பணிக்கு அமர்த்துவது பள்ளி நிர்வாகத்தின் பொதுவான நியதி. விண்ணப்பிக்க ஆசிரியர்கள் இதில் எந்த ரகம் என்பதை ஆராய வேண்டும். உதாரணமாக, உடல் ஆரோக்கியம் காரணமாக நான் மாலையில் பணிக்கு அமர்த்தப் பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்படுகின்ற பாடங்களும் அரசாங்க சோதனைக்கு உட்படாத பாடங்கள் ஆகும். நான் எந்த வகையில் காலையில் பணிக்கு அமர்த்த விண்ணப்பிப்பது நியாயமன்று. இப்படி விண்ணப்பிக்கின்ற ஆசிரியரும் தங்களைச் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் பரஸ்பரமும் புரிந்துணர்வும் இருக்க வேண்டியது அவசியம். அப்படி பரஸ்பர உணர்வு இருந்தால்தான், நம்முடைய ஏதாவது ஒரு தேவைக்கு அவர் அனுமதி வழங்குவார். பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்கள் தலைமையாசிரியர்களை மதிப்பதில்லை. அல்லது அவருடைய கட்டளைகளுக்கு உடன்படுவதில்லை. உதாரணமாக யுபிஎஸ்ஆர் தேர்ச்சியின் விகிதத்தை உயர்த்துவதற்கு தலைமையாசிரியர் பின்னேற/சனி/ஞாயிறு வகுப்புகளை நடத்துகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடத்துவது சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தாலும், மாணவர் கல்வி நலனைப் பொறுத்தவரை இது நியாயமான காரியமாகும். இந்தப் பிரச்சனையை மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கும் ஆசிரியர் சங்கத்திற்கும் கொண்டு செல்லும் பட்சத்தில், தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது நிச்சயமாகும். ஆனால், இந்தப் பிரச்சனையில் தன்னைச் சிக்க வைத்தவர் மீது அவர் கால்ப்புணர்ச்சி கொண்டிருப்பார். அந்த வகையில், தன்னைக் ‘காட்டிக் கொடுத்த’ முதுகலைக் கல்வியை மேற்கொள்வதற்கு அவர் இடையூறு செய்வார்.

நீங்கள் உயர்க் கல்வியைத் தொடர்வதால் பள்ளிக்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும்  பயன் ஏதாவது இருக்கிறதா? இன்று பல தலைமையாசிரியர்கள் சமூகவாதிகளாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்களோடு சுயநலப் போக்குடைய ஆசிரியர்கள் வேலை செய்வது கஷ்டம். உதாரணமாக ஒரு தலைமையாசிரியர் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பள்ளியில் தங்கி வேலை செய்கிறார்; சனி, ஞாயிறுகளில் கூட அவர் பள்ளிக்கு வருகிறார். மாணவர்களைத் தன் சொந்தப் பிள்ளைகள் போல் கவனிக்கிறார். பள்ளியில் நடைபெறும் வாங்கல் – விற்றல் நடவடிக்கைகளில் மூலம் கிடைக்கும் கமிஷன் பணத்தை பள்ளி மேம்பாட்டுக்காக செலவழிக்கிறார்; பள்ளி கணக்கு வழக்கில் ஏதோ தவறு எற்பட்டதில் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து, அதனைச் சரி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்களோ மாத வறுமானத்திற்காக மாத்திரமே வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். (வேலை செய்கிறீர்கள் என்ற வார்த்தையைக் கவனத்தில் கொள்ளவும்). நீங்கள் படித்துக் கொடுக்கிறீர்கள்; ஆனால், வகுப்பில் உள்ள பேரளவிலான மாணவர்கள் உங்கள் போதனையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் விளைவாக, பள்ளியின் தேர்ச்சி நிலை சரிகிறது. தலைமையாசிரியர் உங்களை விசாரிக்கும் போது, அவர் மனதைச் சங்கடப்படுத்தும வகையில் பேசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் தலைமையாசிரியரைப் பொறுத்த வரை, நீங்கள் மேற்கொள்கிற உயர்க்கல்வியால் பள்ளியும், சமுதாயமும், நாடும் எந்தப் பயனும் அடையாது, என்ற எண்ணமே தோன்றும். அதாவது, உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்கு மட்டுமே நீங்கள் பயில்கிறீர்கள். பள்ளியைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் நீங்கள் எந்த அக்கறையையும் காட்டவில்லை. எனவே, அந்தத் தலைமையாசிரியரைப் பொறுத்த வரை உங்களைக் காலையில் பணிக்கு அமர்த்தி சலுகை காட்ட வேண்டிய அவசியமில்லை.


உயர்க் கல்வியை மேற்கொள்ளும் தமிழாசிரியர்களுக்குச் சில ஆலோசனைகள்:

எப்போதும் தலைமையாசிரியரிடம் நல்லுறவைப் பேணுங்கள். தலைமையாசிரியர் எதிரே நடந்து சென்றால் வணக்கம் செலுத்துங்கள். அவர் இடுகின்ற கட்டளைகளை முடிந்தவரை நிறைவேற்றப் பாருங்கள். அவர் எதிர்ப்பார்ப்பதை விட அதிகம் செய்வது இன்னும் நல்லது. அப்படியே நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டால், அவர் பரிவையும் இரக்கத்தையும் பெறும் வகையில் பணிந்து பேசுங்கள்.

பள்ளிக்கான உங்கள் சமூகக் கடப்பாட்டை வெளிப்படுத்துங்கள். இதனைப் பல வகையில் செய்யலாம். உதாரணமாக உங்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆர்.எம்.டி வழங்கப்படுகிறது என்றால், உங்கள் நன்கொடையைக் கொடுத்து, மேலும் அதிகமான மாணவர்களுக்கும், அரசாங்கம் நிதியை நிறுத்தும் காலத்திலும் மாணவர்கள் உணவு பெறும் வகையிலும் நிதி வழங்குங்கள். ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவை ஈடுசெய்ய பெ.ஆ.சங்கத்திற்கு உதவுங்கள். பள்ளிக்கு வராமல் மட்டம் போடும் மாணவர்களை வீட்டில் சென்று விசாரித்து அவர்களுடைய பிரச்சனையைக் களையப் பாருங்கள். நிலைமை அணுகூலமாக இருந்தால் வரிய நிலையில் உள்ள குடும்பத்தின் பிள்ளைகளை உங்கள் வீட்டில் தங்க வைத்து பள்ளியில் பயில வையுங்கள்.

சில நேரம் பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் சண்டை போட வருவார்கள். அந்த நேரத்தில் அந்த பெற்றோரைச் சமாதானப் படுத்தி அனுப்புங்கள். நீங்கள் அந்தப் பிரச்சனையில் சம்பந்தப்படவில்லை என்றாலும், மன்னிப்பு கேளுங்கள். தலைமையாசிரியர் பக்கம் தவறு இருந்தால் அதனைப் பக்குவமாக தனிமையில் எடுத்துச் சொல்லுங்கள். பள்ளியில் ஒரு சுபிட்சமான நிலைமைய ஏற்படுத்த உங்கள் யுத்திகளைப் பயன்படுத்துங்கள்.

தலைமையாசிரியருக்கு விரோதமாக வெளியில் பேசாதீர்கள். அவருக்கு விரோதமாக கீழறுப்பு வேலையில் இறங்காதீர்கள். இது, ஒரு பந்தை சுவற்றில் எறிவதற்குச் சம்ம். அந்தப் பந்து உங்கள் முகத்தையே பதம் பார்க்கும். மற்ற ஆசிரியர்கள் குறை பேசினாலும், உங்களுக்கு அதில் உடன்பாடு இருந்தாலும் கூட, தலைமையாசிரியர் பக்கம் பேசுங்கள். ஆனால், அதே நேரத்தில், தலைமையாசிரியரிடம் பக்குவமாக அவர் குறையைச் சுட்டிக் காட்டுங்கள். அதற்கென்று ‘போட்டு கொடுக்காதீர்கள்’. நீங்கள் ஒரு சிறந்த சமூகவாதியா இல்லையா என்பது, இது போன்ற பிரச்சனைகளை அணுவதில் வெளிப்படும். ஓர் ஆசிரியர் தலைமையாசிரியரைப் பற்றி குறைபேசும் போது, நீங்களும் சேர்ந்து பேசுவதும் ஆபத்து; அந்த ஆசிரியரைப் பற்றி ‘போட்டுக் கொடுப்பதும்’ ஆபத்து.

நீங்கள் மேற்கொள்ளப் போகிற உயர்க் கல்வி அந்தப் பள்ளிக்கே பயனைக் கொண்டு வரும் என்று நிரூபியுங்கள். இந்த நம்பிக்கையை உண்டாக்குவது எப்படி? இன்று பல ஆசிரியர்கள் கல்லூரியில் கற்கின்ற விஷயங்களை, கல்லூரியை விட்டு வெளியேறும் போது, அங்கேயே மூட்டை கட்டி வைத்து வந்து விடுவார்கள். உண்மையில் கல்லூரியில் பயில்கின்ற விஷயங்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்கு பல வகையில் ஒத்தாசையாக இருக்கும். ஆனால், சில ஆசிரியர்கள் யுபிஎஸ்ஆர் வகுப்பை எடுத்து நடத்த அஞ்சுவார்கள். இதனால் தங்களுக்கு வேலைப் பளு அதிகரித்து விடும் என்று கவலைப்படுவார்கள். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி கை கழுவப் பார்ப்பார்கள். இப்படிச் செய்தீர்கள் என்றால், உண்மையில் உங்கள் முதுகலைக் கல்வி எந்த வகையிலும் எந்தப் பள்ளிக்கும் பயனளிக்கப் போவதில்லை. நீங்கள் முன்பு கல்லூரியில் பயின்ற விஷயங்கள் எல்லாம் இப்போது பணி புரிகிற பள்ளியில் பயனுடையதாக இருக்கிறது என்றால், உங்கள் உய்ரக் கல்விக்கு அணுகூலமாக உங்களைக் காலை நேரப் பணிக்கு அமர்த்துவர், தலைமையாசிரியர்.

இன்னும் பிரச்சனையா?

உங்களுக்கு இரண்டு தேர்வு இருக்கிறது:
1.    ஒரு நேரப் பள்ளிக்கு மாறிச் செல்லுங்கள். இயல்பாகவே உங்களை மாலை நேரப் பணிக்குத் தலைமையாசிரியர் அமர்த்த முடியாது.
2.    சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் (CBTG).

கடைசியாக ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
            மேற்கண்ட என் பதிவை வாசித்த பிறகு, இந்தத் தலைமையாசிரியர் உண்மையிலேயே உங்களிடம் நியாயமில்லாமல் நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். rawangjohnson@yahoo.com என்ற எனது மின்னஞ்சலுக்கு எழுதி எல்லா விபரங்களையும் தெரிவியுங்கள். ஒரு சில தலைமையாசிரியர்கள் சமுதாயத்தைக் கெடுக்கும் வைரஸ்களாக இருக்கிறார்கள். அவர்களைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன். வேறு சிலர் இன்னும் என் பார்வையில் சிக்காமல் இருக்கிறார்கள். ‘இந்தியன் தாத்தா’, ‘அந்நியன்’ போல் இப்படிப்பட்டவர்களை அழித்துக் கட்டுவதற்குத் தயாராக இருக்கிறேன். உங்களுடைய எந்த விபரமும் எந்த வகையிலும் வெளிப்படாது. யாரும் அறியாத நேரத்தில், அவர்களுக்கு விரோதமான ‘தாக்குதல்’ மேற்கொள்ளப்படும். எனது நீண்ட பதிவை வாசித்த பிறகு உங்களுக்கு என் மீது நம்பிக்கை ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

Sunday, July 22, 2012

மாணவர்கள் கையில் மின்னியல் சாதனங்கள் காலத்தின் கட்டாயங்கள்



(நான் செம்பருத்தி என்ற அகப்பக்கத்தில் பதிகின்ற கருத்து பெரும்பாலும் மறுக்கப்படுவதால், இங்கேயும் பதிவு செய்கிறேன்)

Think out of the box – கைப்பேசிகளும் இதர மின் சாதனங்களும் கொண்டு வருகிற சீர்கேடுகளை மட்டும் பார்க்கும் நாம் அதன் பயன்களைப் பார்க்காமல் இருப்பது வேதனையே!

இன்றைய மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் இல்லை என்பதற்கு ஆதாரணமாகப் பின்வரும் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம் - http://www.facebook.com/photo.php?fbid=498705973478998&set=a.171684932847772.49098.100000187980670&type=1&theater  இந்த மாணவனின் புத்தகப் பையில் ஒரு புத்தகமும் எந்தவிதமான எழுது உபகரணமும் இல்லை. இவனைப் போன்று பல ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களைப் போன்றோர் கல்வியில் ஆர்வம் காட்ட மாற்று வழி ஆராயப்பட வேண்டியிருக்கிறது.

‘நாங்கள் பயிலும் போது வீட்டு அலைபேசிகளைக் கூட கண்டதில்லை. நாங்களும் நன்றாகப் படித்து முன்னேறியிருக்கிறோமே?’ – இது பழைமை வாதம். இதற்கு என் சொந்த அனுபவத்தைக் கூற விரும்புகிறேன்.

நான் ஆரம்பப் பள்ளியில் யுபிஎஸ்ஆர் தமிழ்ப் பாடம் போதித்து வந்தேன். அவர்களுக்காக ஏராளமான கேள்வித் தாள்கள் தயாரிக்க வேண்டியிருந்த்து. எனவே, ஆசிரியர் மீட்டிங் போது ஒரு தமிழ் டைப்ரைட்டர் வாங்கி வைக்கச் சொன்னேன். அதற்கு அந்தத் தலைமையாசிரியர் என்ன சொன்னார் தெரியுமா?

‘நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஸ்டென்சிலில் கையால்தான் எழுதுவோம். நீங்கள் என்ன டைப்ரைட்டர் கேட்கிறீர்கள்?’ – இப்படிப் பட்ட பழைமைவாதத் தலைமையாசிரியர்களைத் திருத்த முடியாது என்பதை உணர்ந்து, நானே இந்தியாவில் இருந்து ஒரு தமிழ் டைப்ரைட்டரை வரவழைத்து எல்லா கேள்வித் தாள்களையும் டைப் செய்து தரமாக மாணவர்களுக்கு வழங்கினேன்.

ஒரு சில வருடங்களில் பள்ளிகளில் கணினி பிரவேசிக்கத் தொடங்கியது. கணினி தமிழ்க் கல்வியைச் செம்மைப் படுத்தும் சிறந்த உபகரணமாகத் திகழும் என்பதை உணர்ந்த நான் ஆசிரியர்களும் கணினியைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யுமாறு ஆசிரியர்கள் மீட்டிங்கில் கேட்டுக் கொண்டேன். மீண்டும் தலைமையாசிரியர் பழைமைவாத வசனங்களைப் புலம்ப ஆரம்பித்தார். அவரும் பள்ளியில் சகுணிகளாகச் செயல்பட்ட சில மூத்த ஆசிரியர்களின் வசனங்களை இங்கே எழுதுகிறேன்.

தலைமையாசிரியர் – கணினி நிர்வாகத்திற்கு மட்டும்தான். (மலாய்கார கிராணி மட்டும் பயன்படுத்த முடியும்)

துணைத் தலைமையாசிரியர் 1 – ஜான்சன் என்ன game விளையாடுவதற்காக கணினி வாங்கியிருக்கிறாரா? (நான் சொந்தமாக கணினி வாங்கிய பிறகு. .  . .)

துணைத் தலைமையாசிரியர் 2 – நீங்கள் கணினி படித்திருக்கிறீர்கள் என்பதற்கு சான்றிதழ் இருக்கிறதா? (மிகவும் ஆத்திரத்துடன். . . . PPD அனுப்பிய ஒரு survey பாரத்தில் அவர் மட்டும் கணினியில் ஜாம்பவன் என்ற வகையில் தன் பெயரை எழுதிக் கொண்டார். எனக்கும் கணினி அறிவு இருக்கிறது என்று சொன்ன போது, அற்ப புத்தி கொண்ட அந்த துணைத் தலைமையாசிரியர் அப்படி என்னிடம் எகிறினார்).

கிராணி – Jangan sentuh Johnson! Nanti rosak. . . . (புதிதாக வந்தக் கணினியை நான் இயக்க முற்பட்ட போது. பேசிய வசனம் இது)

இப்படிப் பட்ட பழைமைவாத காலணியின் மத்தியில் பணி புரிந்த நான், இவர்கள் சமுதாயத்தின் வைரஸ்கள் என்பதை உணர்ந்தவனாய் கணினி வாங்கும் கடன் பாரத்தை நிரப்பி PPD-இல் கொடுத்தேன். அங்கே அதற்குச் சம்பந்தப் பட்ட அதிகாரி அதனை அப்படியே குப்பையில் போட்டு விட்டார் போலும். பதிலே வரவில்லை. ஆனால், எனக்கு முன்னதாக மனு செய்த பள்ளியின் கிராணிக்கு (மலாய்க் காரன்) அந்தக் கடன் கிடைத்தது இன்னொரு வேடிக்கையான வேதனை. (அந்த பிபிடி அதிகாரி மோசடி குற்றச்சாட்டில் இன்னும் தண்டனை அனுபதித்து வருகிறார். அப்படிதான் வேணும். . .)

Jangan sentuh Johnson, nanti rosak என்று கட்டளையிட்ட கிராணியோ, கணினித் திரையில் ஒன்றும் தோன்றவில்லை என்பதால் பதறிப் போனான். என்னென்னவோ செய்து பார்த்தான். முன்பு குறிப்பிட்ட ஜாம்பவானும் வந்து பார்த்தார். ஒன்றும் முடியவில்லை. கடைசியில் என்னைக் கூப்பிட்டார்கள். கணினி மோனிட்டரின் கீழ் உள்ள சில புத்தான்களைத் திருகி விட்டேன். திரைக் காட்சி தென்பட்டது.

எனவே, வேறு வழி இல்லாமல் Bank Rakyat-இல் கடன் வாங்கி ஒரு கணினி வாங்கினேன். அப்போதுள்ள நிலைமையில் அதற்கு 6,000 ரிங்கிட் தேவைப்பட்டது. தமிழ் செயலியான முரசு என்ற மென்பொருளுக்கு மட்டும் 1,200 ரிங்கிட் வழங்கினேன்.

இப்படி ஓர் ஆசிரியர் மாணவர் நலனுக்காகவும் பள்ளி நலனுக்காகவும் சொந்தப் பெயரில் கடன் வாங்கி செலவழித்த காலம் ஒன்று இருந்தது.

‘நாங்கள் எல்லாம் ஸ்டென்சிலில் கையால் எழுதினோம்’ என்று பழைமைவாதம் பேசிய தலைமையாசிரியர் தன் பிள்ளைகளை ஒரு ‘தரமான’ மலாய்ப் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்தார். அதைவிட மோசமான காரியம் ஒன்று உண்டு. அவர் ஜம் என்று தோயோத்தா கொரோனா காரில்தான் பள்ளிக்கு வருவார். அவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கூட கூட ஹோண்டா சி70 மோட்டார் சைக்கிளில்தான் வருவார்கள் என்று கூறி அவர் மூக்கை உடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிப் பேசாமல் செய்கையில் தான் மூக்கறுத்துவிட்டேன்.

நான் கணினியில் ஆவணங்களைத் தயாரித்து மாணவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய பிறகு என்ன நடந்த்து?

தலைமையாசிரியர் பள்ளியின் ஆவணங்களை என்னிடம் கொடுத்து அடிக்கச் சொல்வார். நானும் வேலையைச் செய்து கொடுத்து விட்டு ஒரு பில் போட்டு அனுப்புவேன். ‘ஸ்கூர் வேலைக்கு ஏன் பில் போடுகிறீர்கள்’ என்று கேட்பார். நிர்வாகப் பணிகளைச் செய்வதற்குக் கிராணியும் பள்ளி கணினியும் இருக்கும் போது, நான் என் சொந்தக் கடனில் வாங்கிய கணினியில் இலவசமாக செய்து கொடுக்க முடியுமா?

பிறகு துணைத் தலைமையாசிரியர் (1) புக் லிஸ்ட் டைப் செய்து தரச் சொல்வார். நானும், கேம் விளையாடுவதற்குதான் கம்பூட்டர் வாங்கி வைத்திருக்கிறேன் என்று சொல்வேன்.

அப்புறம் இரண்டாவது துணைத் தலைமையாசிரியர் கதை இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. நான் தமிழிலேயே அழகழகான பேனர்களைச் செய்து பள்ளியில் ஒட்டி வைப்பேன். இந்த வேலைகளை வீட்டிலேயே செய்து எடுத்து வருவேன். இதைக் கண்ட அந்த து.த.ஆசிரியர் தானும் செய்ய முடியும் என்ற தோரணையில் பள்ளியின் கணினியில் உட்காருவார். காலை 7.30க்குத் தொடங்கிய வேலை நண்பகல் 1.30 ஆனாலும் முடியாது. மணி அடித்தவுடன் பள்ளி நேரம் முடிந்தது என்று வேறு வேலையில் பணம் சம்பாதிக்கப் பறந்து விடுவார். இடைப்பட்ட நேரத்தில் பாடம் நடைபெறாது. மாணவர்கள் ‘அம்போ’ என்று காத்துக் கொண்டிருப்பார்கள்.

இந்தப் பிற்போக்குச் சிந்தனைகளை நீட்டி எழுதுவதற்குக் காரணம் உண்டு.

மாணவர்கள் கைப்பேசிகள், ஐபெட், ஐபோட் போன்ற மின்னியல் சாதனங்களைக் கொண்டு வருவதை ஆட்சேபிக்கும் நாம் அதன் மூலம் கற்றல் – கற்பித்தலை மட்டுமல்லாமல், கட்டொழுங்கு, தவணை சோதனை போன்றவற்றைச் செம்மையாக நடத்த முடியும் என்பதை மறந்து விடுகிறோம். இது ஒரு வகை அறியாமைதான். அது மட்டுமல்லாமல் அரசாங்கம் இலவச பாட புத்தகத்திற்காக செலவு செய்யும் பணத்தைக் கூட மிச்சப்படுத்தலாம்.

மாணவர்கள் ponteng அடிப்பதையும் தவிர்க்கலாம் என்பதைச் சொன்னால் கூட நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். Bluetooth போன்ற சாதனங்கள் மூலம் வகுப்பில் இல்லாத மாணவர் யார் என்று அடையாளம் கண்டு, அவர்களின் பெயர்களை Disiplin Board-க்கு அனுப்பி விடலாம். அத்தோடு அதிநவீன கருவிகள் பொறுத்தப் பட்டால், அந்த மாணவர்கள் பள்ளிக்கு வெளியே எங்க சுற்றித் திரிகிறார்கள் என்பதைக் கூட அறிந்து விடலாம். கல்வியில் அக்கறை இல்லாவிட்டாலும் குறைந்தது அச்சத்தின் காரணமாக மாணவர்கள் ponteng அடிப்பதைத் தவிர்ப்பார்கள்.

பாட புத்தகமா? – அது மின்னியல் புத்தகமாக இருக்கட்டும். பயிற்சி புத்தகமா? – மாணவர்கள் மின்னியல் முறையிலேயே பயிற்சிகள் செய்யட்டும். தவணை சோதனையா? – அதையும் ஆசிரியர்கள் மின்னியல் முறையிலேயே நடத்தட்டும். இப்படி மின்னியல் முறையில் சோதனை நடத்தப்பட்டால் ஆசிரியர்களுக்கு நூற்றுக் கணக்கான தாள்களைத் திருத்தும் சுமையும் இயல்பாகவே குறைந்து விடும். Rujukan செய்வதற்குக் கூட மாணவர்கள் தங்கள் ஐ-போன், ஐ-பேட், ஐ-போட், NetBook போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இது எவ்வளவு அணுகூலமானது என்று யோசித்துப் பாருங்கள்.

ஓர் ஆசிரியர் மின்னியல் சாதனங்களைத் தம் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு www.mysemekar.blogspot.com என்ற எனது வலைப்பூவிற்கு வலம் வருமாறு கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள், தங்கள் குற்றங்கள் இந்த வலைப்பூவில் பதிவு செய்யப்படுகின்றன என்பதை அறிந்து தங்கள் தவறுகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மின்னியல் சாதனங்கள் தீமைகளையும் கொண்டு வரும் என்பது மறுப்பதற்கில்லை. இவற்றைச் சமாளிக்க மாற்று வழிகள் ஆராயப்பட வேண்டும். உதாரணமாக பாட நேரத்தில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது கைப்பேசி அலறி இடையூறு விளைவிக்கலாம். இதற்கு எனது ஆலோசனை என்னவென்றால் பள்ளி வளாகத்திற்குள் சிக்னல் வருவதைத் தடைசெய்யலாம். இந்த அணுகு முறை செலயாங் மருத்துவமனையிலும் இதர பாதுகாப்பு பொருந்திய இடங்களிலும் அணுசரிக்கப்படுகிறது. அதே போல் ஒவ்வொரு பிர்ச்சனைகளை கையாள்வதற்கு அணுகுமுறையைத் தேட வேண்டுமே ஒழியே, அதற்குத் தடை விதிப்பது நமது எதிர்காலத் தலைமுறையினர் உலக சவால்களை எதிர்நோக்கும் சக்திகளைக் குன்றச் செய்யும் என்பதை உணர வேண்டும்.

மட்டுமன்றி, என்னதான் சட்டம் விதித்தாலும் மாணவர்கள் கைப்பேசியைக் கொண்டு வருவது தடுக்கப்பட முடியாத காரியம் என்பதை உணர வேண்டும். எங்கள் பள்ளியில் பல மாணவர்கள் கைப்பேசி கொண்டு வருகிறார்கள். என் பிள்ளைகள் கூட என் கட்டளைளை மீறி கைப்பேசியைப் பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

எனவே, கிணற்றுத் தவளை போல் சிந்திக்காமல் think out of the box என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.